சென்னை: கடந்த ஆண்டு ஜூலை மாதம், தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினகுடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் வாழைத்தோட்டம் பகுதியில் சிகிச்சை அளித்தனர். பின்னர் யானையை காட்டில் விட்டனர். ஆனால், யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.
இந்நிலையில் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன், “திரும்பி வந்த ரிவால்டோ யானையை மீண்டும் காட்டில் விடக்கூடாது. மேலும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு யானையை கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும்” என கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (ஜூலை 1) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘சிகிச்சை இல்லாமல் ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.
அதேநேரம் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தரப்பில், ‘ரிவால்டோ யானையை ஐந்து மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் காட்டிற்குள் விடப்பட்டுள்ளது. இதனால் ரிவால்டோ யானை காட்டில் ஆரோக்கியமாக இருக்கிறது’ எனக் கூறி அதற்கான ஆவணத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள் அமர்வு, ''முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. எனவே, ரிவால்டோ யானையை மீண்டும் திருச்சி முகாமில் அடைக்கக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்படுகிறது” எனக் கூறி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' - திமுக, அதிமுகவை வசைபாடிய மருத்துவர்கள் சங்கம் - ஏன் தெரியுமா?