தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தனி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள சேகர், தனக்கு உதவியாக இயக்குநர் பாரதிராஜா, சத்யஜோதி தியாகராஜன், எஸ்.வி.சேகர் உள்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார். இந்த குழு நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே தனி அலுவலர் சேகர் நியமனத்தை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்காலிக குழுவை நியமிக்க தனி அலுவலருக்கு அதிகாரமில்லை எனவும், குழுவில் உள்ள ஏழு பேருக்கு எதிராக சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கதிரேசன் தரப்பில் வாதிடப்பட்டது.
தனி அலுவலரின் உதவிக்காகதான் தற்காலிக குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழு சங்க நிர்வாகத்தில் தலையிடாது எனவும் அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, தற்காலிக குழு நியமனத்திற்கு தடை விதிக்க மறுத்து, வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.