சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும், எனவே அதனை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர் பாத்திமா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று (ஏப்ரல்.19) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலை வளாகத்தில் தேங்கிக் கிடக்கும் அபாயகரமான கழிவுகளால் அப்பகுதியில் மண் மாசடைந்து விட்டதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தனர்.
இதற்கு ஆலை நிர்வாகம் தரப்பில், செம்பு கழிவுகள் அபாயகரமானதா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டனர்.இந்த விவகாரத்தில் தீர்வு என்ன என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், நான்கு வாரங்களில் இது சம்பந்தமாக விளக்கமளிக்கவும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.