சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர், தனது சித்தியுடன் திருமணத்தை மீறிய உறவை வைத்துக் கொண்டு, சித்தி மற்றும் அவரது குழந்தைகளுடன் வசித்து வந்ததாகத் தெரிகிறது. இதை அவரது அத்தை குணசுந்தரி தட்டிகேட்டதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு, ஏற்கனவே கொடுத்த பணத்தையும் உடனே திருப்பித் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதனால், சித்தியுடனான உறவிற்கு அத்தை இடையூறாக இருப்பார் எனக் கருதிய கணேஷ், தனது அத்தை குணசுந்தரியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பாக, கணேஷ் மீது கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை சென்ட்ரல் அருகே உள்ள அல்லிகுளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 9) அல்லிகுளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாரூக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.ஆரத்தி ஆஜரானார். பின்னர் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அத்தை ஞானசுந்தரியை கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகக் கூறி, கணேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதேபோல், கடந்த ஜூலை 27ஆம் தேதி, திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கணவரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித்குமார் சிங் (32). இவரது மனைவி சத்யா (30). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ரஞ்சித்குமார் சிங் பெரியகுளம் பகுதியில் ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய தொடர்பில் இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவில் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரஞ்சித்குமார் சிங் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மனைவி கூறி உள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சித் குமாரின் பெற்றோர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், சத்யா தனது கணவரை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இது தொடர்பான வழக்கில், சத்யா குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.