சென்னை மாநகர் திருவல்லிக்கேணி காவல் சரகத்தில் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர் தர்மராஜ் உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 216 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காவல் துணை ஆணையர் தர்மராஜ் செல்போன்களை உரியவர்களிடம் வழங்கி, திருட்டு சம்பவங்களில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை பாராடினார்.