தமிழகத்தில் விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வாக்குப் பதிவுக்கு மின்னணு எந்திரங்களும், ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துக்கு வாக்குச்சீட்டு முறையிலும் வாக்குப்பதிவு நடக்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த வாக்குச்சீட்டுகளை வாக்காளர் பிரித்து அறிவதற்காக பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து பரிசீலித்த தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி ஆகிய பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த அவசர சட்டத்தை இயற்றி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்நிலையில் அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் இந்த மின்னணு வாக்குப்பதிவு நடைமுறை பரீட்சார்த்த முறையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படவுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.