சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணி விவகாரம் குறித்து டெல்லி மேலிடத்திடம் ஆலோசிக்க அண்ணாமலை இன்றிரவு பயணம் செய்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியின் ஈபிஎஸ் அணி சார்பாக கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக போட்டியிடுவார் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். நேற்றைய(ஜன.31) தினம் இடைத்தேர்தல் தொடர்பாக அண்ணாமலை தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: "பாஜகவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக அதிமுக காத்திருக்கட்டும். அதில் ஒன்றும் தவறு இல்லை" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பிலான அதிமுக கட்சியின் சார்பாக போட்டி என அறிவிப்பு வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று(பிப்.1) ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்ச்சியில் அதிமுகவினர், "தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி" என அறிவித்துள்ளனர். பாஜகவுடனான கூட்டணி என்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். இதில் ஈபிஎஸ் தரப்பில் 'முற்போக்கு கூட்டணி' என்று அறிவித்திருப்பது பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே அக்கட்சியின் டெல்லி மேலிடத்திற்கு அண்ணாமலை கூறியிருந்த நிலையில் நேரடியாக பல விவரங்களை தெரிவிப்பதற்காக டெல்லி செல்கிறார்.
இதையும் படிங்க:ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட் - பிரதமர் மோடி