சென்னை: கரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களை நேரடி விசாரணைக்கு திறக்க கோரி வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தாம்பரம் நீதிமன்றம் வளாகத்தின் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கீழமை நீதிமன்றங்களை நேரடி விசாரணைக்கு திறக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாம்பரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரங்கராஜன், "நாடாளுமன்றம் மற்றும் இந்தியாவிலுள்ள சட்டப்பேரவை, அரசு அலுவலகங்கள் ஆகியவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. ஆனால், நீதிமன்றங்கள் மட்டும் மூடப்பட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.
இந்த கரோனாவால் பாதிக்கப்பட்ட பல வழக்கறிஞர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் கூட உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கவில்லை. மேலும், கரோனாவால் வழக்கறிஞர்களின் குடும்பங்கள் மிகவும் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 38 நீதிமன்ற வளாகத்தின் முன்பு 70,000 வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 13 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும், இல்லையென்றால் போராட்டங்கள் தொடரும் என வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பாக எச்சரிக்கை விடுகின்றோம்" என்று கூறினார்.
இதையும் படிக்க: பெண் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம்: அதிமுகவினர் டிஜிபியிடம் புகார்