இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகத் தொழிலாளர்களின் உரிமை பிரகடன நாளான மே நாளைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள பாட்டாளிகளுக்கு எனது உளமார்ந்த தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள்.
இந்த உலகின் முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் வழங்கப்பட்டதா? என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதிலும் குறிப்பாக உலகம் முழுவதுமே புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கு இருந்த அதிகாரங்களும், உரிமைகளும் பறிக்கப் பட்டு விட்டன.
உரிமைகளைக் கோராத வரையில் தான் உழைப்பாளர்கள் பணியில் இருக்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் பணியை இழக்க வேண்டியது தான் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கத்திற்கு உயர்வு கிடைக்க வேண்டும்; உரிமைகள் கிடைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி போராட பாட்டாளிகள் நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.