தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மோடியின் ஒராண்டு ஆட்சி மிகவும் தோல்வியான ஆட்சி, தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்டுப்பட்டில் இருக்கிறது. ரிசர்வ் வங்கியில் இருந்த பணத்தை எடுப்பதற்கு கடந்த ஆட்சிக்காலத்திலே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போதைய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் உபரி நிதியை எடுக்க சம்மதிக்கவில்லை. மேலும் அவர்கள் கொடுத்த அழுத்தத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக வந்த உர்ஜித் பட்டேலும் ராஜினமா செய்தார். தற்போது பொருளாதரம் குறித்து ஒன்றும் அறியாத ஐஏஎஸ் அலுவலர் ஒருவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்து அந்த உபரி நிதியை எடுத்துள்ளனர்.
அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஜனநாயக நாட்டில் பாஜக சர்வாதிகாரத்தை புகுத்தப்பார்க்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், நாங்குனேரி இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தலைமை இருக்கிறது. தலைமையுடன் அமர்ந்து பேசி தேர்தல் அறிவிப்புக்கு பின்பு இடைத்தேர்தலில் யார் வேட்பாளர் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார்.