தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு நோன்பை முடித்து உணவு உட்கொண்டனர்.
பின்னர், பேசிய கே.எஸ். அழகிரி, "ஜூன் மாத இறுதிக்குள் காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 9.2 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கூறியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு இதுவரை தண்ணீர் வழங்க முன்வரவில்லை. காவிரியில் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வாரியம் கூறியிருக்க வாய்ப்பில்லை. எனவே, கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணையை ஏற்று தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மோசமான தண்ணீர் பிரச்னையைச் சந்தித்துவருகிறது. மக்களுக்குக் குடிநீர் வழங்க முடியவில்லை என்றால் அரசு தோற்றுப் போனதாக அர்த்தம். மக்களின் வரிப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தண்ணீர் வழங்க அரசு வழிவகை செய்யவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆண்டவன் நிறையக் கொடுப்பான் ஆனால் எடுத்துக் கொள்வான் என்று ரஜினி பாணியில் ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினி திரைத்துறையில் பேசுவதால் அதற்கு வரவேற்பு கிடைக்கின்றது. அவருடைய வசனத்தைப் பேசுவதால் ஓபிஎஸ் ரஜினி ஆகிவிட முடியாது.