சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, "எந்த கருத்தை முன்வைத்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளலாம் என ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினோம். இடங்கள் பங்கீடு குறித்து அவரிடம் பேசவில்லை. மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சியை தனி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டுமென திருமாவளவன் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பது அவருடைய கட்சியின் நிலைப்பாடாக இருக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை நிலைப்பாடு உண்டு. அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்களை உள்ளாட்சி தேர்தலில் வாங்க முடியாது.
இந்தியா உதவி இல்லாமல் செயல்பட முடியாது என்பதை இலங்கை தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு புரிந்திருக்கும். இந்தியாவில் அனைத்து மாநில மக்களின் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து சரி சமமாக நடத்துவது போல் இலங்கையிலும் நடத்தவேண்டும். ஏற்கனவே தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக செயல்பட்டதை தவறு என ராஜபக்சேக்கள் உணர்ந்திருப்பார்.
பாபா ராம்தேவுக்கு பெரியாரின் கொள்கை பற்றிய புரிதல் இல்லை. பாஜகவினருக்கு பொருளாதாரத்தைப் பற்றி தெரியவில்லை. கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள் தான் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிப்பார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தால்தான் தனியார் துறை நிறுவனங்களின் விலை ஏற்றம் கட்டுக்குள் இருக்கும்" என தெரிவித்தார்.