சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதைக் கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி, "நேஷனல் ஹெரால்டு பத்திரிகை காங்கிரஸ் கட்சியின் சொத்து. அதனைக் காப்பாற்ற காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான விவகாரத்தில் எந்தவித பணப் பரிவர்த்தனையும் நடக்கவில்லை என்கிற நிலையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது சட்டப்படி செல்லாது.
இருந்தும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆகியோரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.
சாஸ்திரிபவனை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒன்றிய பாஜக அரசு பழி வாங்குவதற்காக பொய் வழக்கு போட்டுள்ளதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திரளான தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் முறையாக கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியிடம் 3 மணி நேரமாக தொடர்ந்த விசாரணை நிறைவு