சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "என் வீட்டை முற்றுகையிடப் போவதாக சிலர் கூறினார்கள். யாராவது வருவார்களா? என காத்திருந்தேன்.
ஆனால் யாரும் வரவில்லை. நான் தவறான அர்த்தத்தில் சேரி என்ற வார்த்தையைக் கூறவில்லை. பிறகு ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?. சேரி என்றால் பிரெஞ்சில் அன்பு, அழகு என்று அர்த்தம். வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பதில் உள்ள சேரி என்ற வார்த்தை தவறானதா? அரசு பதிவேடுகளில் கூட சேரி என்ற வார்த்தை உள்ளதே.
தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பிட்டு நான் பேசவில்லை. பட்டியலின மக்கள் நம்முடன் சமாக வாழும் தகுதி இல்லாதவர்களா?, அவர்கள் வாழும் பகுதியைச் சேரி என்று ஏன் சொல்கின்றனர்?, குறிப்பிட்ட இடத்தில் வாழ்வோர் தாழ்த்தப்பட்டோர் என என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. திமுகவை குறிப்பிட்டு நான் எழுதிய பதிவுக்கு காங்கிரஸ்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?.
காங்கிரஸ் திமுகவின் செய்தித் தொடர்பாளராக செயல்படுகிறதா? தமிழகத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டதை காங்கிரஸ் ஏன் எதிர்க்கவில்லை. மணிப்பூரில் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன்.
மணிப்பூர் கலவரம் குறித்து மே மாதமே தேசிய மகளிர் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. மணிப்பூர் மாநிலம் பற்றி குறிப்பிட்ட காணொளியைப் பார்த்த பிறகுதான் எனக்கு அந்த பிரச்னை பற்றி தெரியவந்தது. புகார் வந்தால் மட்டுமே மகளிர் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.
மகளிர் ஆணையம் காவல்துறை கிடையாது. த்ரிஷா குறித்து எங்களிடம் புகார் வந்ததால் தான், நான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். காயத்ரி ரகுராம் இதுவரை மகளிர் ஆணையத்தில் எந்த புகாரும் தரவில்லை. நடிகை ரோஜா எங்களிடம் புகார் அளித்தார். எனவே, அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்தோம். புகார் வந்தால் தான் மகளிர் ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.
மன்சூர் அலிகான் - த்ரிஷா இடையே பிரச்சினை சாதாரணப் பிரச்சினை. தேவையில்லாத ஒரு பிரச்சினை. இப்போது பெரிதாகி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அது அப்போதே சரியாகி இருக்கும். தமிழகத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 450 வழக்குகள் கடந்த ஓராண்டு காலத்தில் பதிவாகி உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் அது குறித்து குரல் கொடுத்துள்ளதா? வேங்கைவயல் குறித்து திமுகவிடம் காங்கிராஸ் கேள்வி கேட்கவில்லை" என்று குஷ்பூ கூறினார்.
இதையும் படிங்க: பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!