சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் புனித யாத்திரைக்காகச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் இதில் பயணித்த ஏழு பேர் உயிரிழந்தனர். இவர்களில் தமிழ்நாட்டின் சென்னை திருமங்கலம் சாந்தம் காலனியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சுஜாதா பிரேம்குமார் மற்றும் இவர்களது உறவினர் கலா என ஒரே குடும்பத்தினர் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் உடல்களை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுவருகிறது. இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரேம்குமாரின் அண்ணன் ராம்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “எனது தம்பி, அவரது மனைவி மற்றும் அவரது உறவினர் ஆகிய மூவரும் இந்த ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த விபத்து குறித்து எங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இவர்களின் இழப்பு எனக்கு அதிர்ச்சிகரமாக இருக்கிறது. என் தம்பியும் அவரது மனைவியும் அதிக கடவுள் பக்தி உடையவர்கள். எனது தம்பியை இழந்தது எனக்கு அதிக துக்கத்தை கொடுத்துள்ளது. பிரேம்குமாருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருவரும் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இதுவரை எங்களுக்கு உதவி வரும் தமிழ்நாடு அரசிற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: சென்னையைச் சேர்ந்த மூவர் பலியான சோகம்