சென்னை விமான நிலையத்தில் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "இந்த கரோனா நேரத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை நடத்தியிருக்கக்கூடாது. கடந்த ஆறு மாதமாக ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இயங்காமல் உள்ளன. இந்த நேரத்தில் மாணவர்களை தேர்வு எழுதச் சொல்வது துரதிஷ்டவசமானது.
பலபேரால் நீட் பயிற்சி மையங்களுக்கு செல்லமுடியவில்லை. அதனால் மாணவர்கள் தயார் நிலையில் இல்லை. மாணவர்கள் சொந்த மாவட்டங்களில் தேர்வு எழுதும் வகையில் இல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய நிலையுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் இந்த நேரத்தில் தேர்வை நடத்த வேண்டாம் என தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இவ்வகையான நுழைவுத் தேர்வுகளுக்கு தேவையே கிடையாது.
இந்த நுழைவுத் தேர்வுக்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கையை நாங்கள் வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக, பாஜகவுடன் நெருங்கிய நட்பில் இருந்தும் இதற்கான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. அடுத்து அமையவிருக்கும் திமுக ஆட்சி இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்