சென்னை: விஷால் வெங்கட் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள 'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நேற்று (டிசம்பர் 13) நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், நடிகை ரித்விகா, இயக்குநர்கள் கே.எஸ். ரவிக்குமார், வெற்றிமாறன், பிரபு சாலமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது கமல் ஹாசன் பேசுகையில், "சினிமா ரசனை என்பது நெருப்பு போல பற்றிக்கொள்வது.
தமிழில் நல்ல இசையில்லை
ஆர்வம், திறமை இல்லாமல் சினிமாவில் சாதிக்க முடியாது. சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. சிலர் இந்தக் கருத்தை மறுத்தாலும் எனக்கு கவலை இல்லை. திரையரங்கில் விளக்கை அணைத்துவிட்டால், அங்கு சாதி காணாமல்போய்விடும். ஆகையால்தான் சினிமாவில் எதைச் சொன்னாலும் நாங்கள் எச்சரிக்கையோடு சொல்கிறோம்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் கற்றுத் தரவே முயற்சிக்கிறது. நாம்தான் கர்வத்தில் பலவற்றை உதாசீனப்படுத்துகிறோம். எங்களைப் பார்த்து புதியவர்கள் வியந்துவிட வேண்டாம். எங்களின் தவறுகளைக் கண்டறிந்து, அதை நீங்கள் செய்யாமல் இருங்கள். யாரும் கோபப்பட்டாலும் சரி, நல்ல இசை தமிழில் இதுவரை இல்லை என்பதுதான் உண்மை.
கரோனா குறித்து அஜாக்கிரதையாக இருக்காதீர். நான் குப்பங்களிலும், மழை நீரிலும் நடந்தபோது வராத கரோனாவானது அமெரிக்கா, துபாய் விமான நிலையங்களிலிருந்து எனக்கு வந்துவிட்டது. இசைக்கு மொழி வேறுபாடு கிடையாது. இசையமைப்பாளர் ரதன் இந்த மேடைக்கு வர ஏ.ஆர். ரகுமானும் ஒரு காரணம் என நினைக்கிறேன்” என்றார்.
தற்போது கமலின் இந்தப் பேச்சுக்கு, "குப்பம் என்றால் குறைவாக போய்விட்டதா? அங்கிருக்கும் மக்களெல்லாம் சுத்தத்தைப் பின்பற்றவில்லை எனக் கமல் நினைக்கிறாரா?” என சர்ச்சை வெடித்துள்ளது.
இதையும் படிங்க: நடிகைகள் கரீனா கபூருக்கும் அம்ரிதா அரோராவுக்கும் கரோனா தொற்று