இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இணை இயக்குனரும் கல்வி தொலைக்காட்சியின் தனி அலுவலருமான பொன்.குமார் கூறியதாவது, "தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வரலாற்றில் கல்விக்கென தனியாக ஒரு தொலைக்காட்சியை வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். கல்வி தொலைக்காட்சியில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான கற்கும் திறனை அதிகரிக்கும் வகையிலும், பாடத்தினை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்கள் விரும்பி கற்கும் வகையிலும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவை மட்டுமின்றி கிராமப்புற, நகர்ப்புறங்களில் உள்ள மாணவர்களின் தனித்திறன்களான ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் தனியார் தொலைக்காட்சிகளில் தங்களின் திறமைகளை காண்பித்தனர். அதேபோல் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்வி தொலைக்காட்சியில் ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் எடுப்பது போல் பாடங்கள் நடத்தப்பட்டு அவை அனைத்தும் ஒளிப்பதிவு செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.