சென்னையிலுள்ள காளிகாம்பாள் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய அறங்காவலர் குழுவை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்றும், அந்தத் தேர்தலில் விஸ்வகர்மா சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்றும் 1935ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், 1935ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மணி ஆச்சாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கறிஞர் பாஸ்கர் என்பவரை தேர்தல் நடத்தும் அலுவராக நியமித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாக அறங்காவலர்கள் சார்பிலும், தமிழ்நாடு அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணவள்ளி ஆகியோர் அடங்கிய அமர்வு, காளிகாம்பாள் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்த தகுதியான நபரை அரசுதான் நியமிக்க வேண்டும் எனக்கூறி, தேர்தல் அலுவலர் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மேலும், முந்தைய காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த இந்து சமய அறநிலையத் துறைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில்