முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை, கொள்ளை விவகாரம் க்ளைமேக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது.
குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சயான் காவல் துறையினரிடம் ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கும் சூழலில் அந்த வாக்குமூலம் 27ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.
கொடநாடும் முன்னாள் முதலமைச்சரும்
இதற்கிடையே, சயானின் வாக்குமூலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இருக்கிறது என்று வெளியான தகவல் மேலும் பரபரப்பை கூட்டியது.
அதுமட்டுமின்றி, கொடநாடு விஷயத்தில் தன்னை இணைக்க திமுக சதி செய்வதாக எடப்பாடி பழனிசாமி தொடர் குற்றச்சாட்டுக்களை வைத்துவருகிறார். அதேசமயம், பழனிசாமி எதற்காக அதீத பதற்றப்படுகிறார் என்ற கேள்வியையும் அரசியல் பார்வையாளர்கள் வைக்கின்றனர்.
ஜெயக்குமார் சொல்வது என்ன?
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கோடநாடு விவகாரத்தை சட்டப்பேரவையில் பேச வேண்டிய அவசியம் என்ன.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல் ஆகும். நீதிமன்றம் ஜனநாயகத்தில் ஒரு தூண். அதுபோல் சட்டப்பேரவையும் ஒரு தூண்.
சட்டப்பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுப்பதோ, நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டப்பேரவை எடுப்பதோ முரணானது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. மடியில் கனமில்லை வழியில் பயமில்லை” என்றார்.