சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசிற்கு இணையான அகவிலைப்படியினை மத்திய அரசு அறிவிக்கும் அதே தேதியில் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈஎல் (EL) சரண்டர் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பின் வாழ்வாதார உரிமை மீட்பு ஆயத்த மாநாடு, சென்னை சேத்துப்பட்டில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர் மாயவன், "தமிழ்நாடு கண்ட முதலமைச்சர்களிலேயே நம்பிக்கை துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அளித்த எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை. எங்களை எல்லாம் சந்திக்க அழைத்தார், போட்டோ எடுத்தார்.
அப்போது நாங்கள் எங்களது கோரிக்கைகளை சொன்னோம். அவற்றை கேட்டுக்கொண்டு, இதுவரை பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை. இதனால் ஜாக்டோ ஜியோ அமைப்பு கோபத்தில் உள்ளது. போராட்டத்தை கையிலெடுப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளன்று(மார்ச் 5) மாநில ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் சென்னையில் ஒன்று கூடி ஆலோசிக்க உள்ளோம். நிதிநிலை அறிவிப்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெறவில்லை என்றால், அன்றே தொடர் போராட்டம் நடத்தப்படும். நிதி பற்றாக்குறை என்பது ஆளத்தெரியாதவர்கள் சொல்லும் பதில்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பிப்.21ஆம் தேதி உண்ணாவிரதம்" - அண்ணாமலை