தகவல் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசென்ட், "2020 ஃபிட் ஃபார் குரோத்" என்றத் திட்டத்தின் அடிப்படையில், 12 ஆயிரம் தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
அவற்றில் ஐந்தாயிரம் ஊழியர்களுக்குத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, மீண்டும் வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும், கடந்த மாதம் அறிவித்திருந்தது. காக்னிசென்ட் நிறுவனம், தற்போது தனது லாபத்தை அதிகரிப்பதற்காகவே, நீண்ட நாட்களாகப் பணியாற்றி வரும் இடைநிலை ஊழியர்களை வேலையைவிட்டு நீக்குவதாக முடிவு எடுத்துள்ளது.
ஊழியர்கள் தாங்களாக வேலையை விட்டுப்போக நிர்பந்திக்கப்படுவதாகவும், இதனை ஏற்காத ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதாகவும் ஐடி தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில், இது தொடர்பாகப் புகார் அளித்து, ஊடகங்களுக்குப் பேட்டி அளித்ததாக எஃப்.ஐ.டி.இ தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவரை காக்னிசென்ட் நிறுவனம் வேலையை விட்டு நீக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக, இன்று தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய எஃப்.ஐ.டி.இயைச் சேர்ந்த இளவரசன் கூறுகையில், "கடந்த அக்டோபர் மாதம் முதல், காக்னிசென்ட் நிறுவனம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது.
சட்டவிரோத வேலை நீக்கத்திற்கெதிராகப் புகாரளித்த இருவர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாகப் பிராஜெக்ட் இல்லாததால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறினாலும், ஐடி ஊழியர்கள் ஒன்றிணைவதற்கு எதிராகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "பெங்களூரூ, புனே உள்ளிட்ட நாட்டின் பல்வேறுப் பகுதிகளிலும் இதுபோன்று வேலை நீக்கங்கள் தொடர் கதையாகி வருகின்றன. காக்னிசென்ட் நிறுவனம் மட்டுமின்றி இன்ஃபோசிஸ் உள்ளிட்ட வேறு சில நிறுவனங்களும் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் இளவரசன் கூறினார்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?