சென்னை: தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களின் சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் எவ்வித பற்றாக்குறையுமின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் போராடிவரும் நிலையில், மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து அங்கு மக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வேண்டி அந்நிறுவனம் வழக்குத் தொடுத்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை நடத்த மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்தினாலும் கவலையில்லை எனக் கூறி இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுத்து தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எட்டு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை அரசே கைப்பற்றி இயக்கலாமா அல்லது வேதாந்தா நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விசிக புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
அதில், "ஆட்சியிலிருந்து போகவிருக்கும் அதிமுக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் நடத்துவதில் இதுவரை கடைப்பிடித்த நடைமுறையைக் கைவிட்டு இப்போது எட்டு கட்சிகளை மட்டும் கூட்டி கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் பாஜகவின் முடிவை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பது சரியல்ல" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது மற்றொரு பதிவில், ஸ்டெர்லைட் ஆலை திறப்பு விஷயத்தில் காட்டும் அக்கறையை தடுப்பூசி விலை நிர்ணயம் செய்வதிலும் நீதிமன்றம் காட்டுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.