சென்னை: மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்கும் இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்காகுருவி’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை பி வி ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகளின் கதையாக, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.
சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் ஒரிஜினல் இயக்குநர் உலகளவில் கொண்டாடக்கூடிய பல படைப்புகளை தந்த இயக்குநர் மஜித் மஜிதி இப்படத்தை பார்த்து விட்டு, பாராட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், “என்னுடைய ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ள ‘அக்கா குருவி’ படத்தை பார்த்தேன், மிகவும் மகிழ்ச்சி. ஒரிஜினலில் உள்ள உணர்வுகளை கதையை இப்படத்தில் கையாண்ட விதம் அற்புதமாக இருந்தது.
மிக உண்மையான மறு உருவாக்கமாக படம் அமைந்துள்ளது. கிளைக்கதையாக வரும் காதல் கதை உங்கள் கலாசாரத்தோடு ஒத்துபோக கூடியதென்று நம்புகிறேன். இப்படத்தின் இசையை மிக மிக ரசித்தேன். கதையின் சாரத்தை வெளிப்படுத்தும் அற்புத இசை.
முடிந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கவும், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் ஆசைப்படுகிறேன். இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்., நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:’பர்த்டே பேபி’ சம்மந்தா க்யூட் க்ளிக்ஸ்