சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-2020 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் ) நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், வாராக்கடன் காரணமாக 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வங்கி 346 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், தற்போது வங்கியின் நஷ்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வாராக்கடனுக்காக 6 ஆயிரத்து 664 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிகர வாராக்கடன் 6 விழுக்காடிலிருந்து 5.81 விழுக்காடாகக் குறைந்துள்ளது. வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் 5,197 கோடி ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் வங்கி அடுத்த காலாண்டில் லாபம் ஈட்டும் என அந்த வங்கியின் தலைமை செயல் அலுவலர் கரனம் சேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல், அடுத்து வரும் நாள்களில் பெரும் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பதற்கு பதிலாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன், விவசாயக் கடன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போதவாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கல்விக்கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் வங்கி - இளம்பெண் ஆட்சியரிடம் புகார்