சென்னை ஐஐடியில் உள்ள சுத்தமான தண்ணீருக்கான சர்வதேச அமைப்பு (ஐசிசிடபிள்யு), நாட்டில் உள்ள தண்ணீர் பிரச்சினைகளைச் சரிசெய்ய புதிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. அந்த வகையில், நீர்த்துறையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்காக ஜப்பான் நிறுவனமான டி.ஜி. டகானோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்க்கும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்கிட ஐசிசிடபிள்யு மற்றும் டி.ஜி. டகானோ இணைந்து பணியாற்றுகின்றனர்.
ஐசிசிடபிள்யுவை ஆதரிக்கும் டி.ஜி. டகானோ, தனது தனித்துவமான அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான தயாரிப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கிட உதவி செய்கிறது. இந்தத் திட்டத்தில் சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் சிலரும் பணியமர்த்தப்படுவார்கள். ஐசிசிடபிள்யு, டி.ஜி. டகானோ ஆகிய இரண்டும் இணைந்து திட்டங்களுடன் தொடர்புடைய புதிய தயாரிப்புகள், சேவைகளை உருவாக்கின்றன.
![ஐசிசிடபுள்யு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/a-laboratory-at-international-centre-for-clean-water-iit-madras_0511newsroom_1604566415_469.jpg)
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய சென்னை ஐஐடி பேராசிரியர் டி. பிரதீப், "தண்ணீரைப் பாதுகாக்க நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப கூட்டு அவசியம் தேவை. இது சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
ஐசிசிடபிள்யு நிலத்தடி நீர்ப் பகுப்பாய்வு, சுத்தமான நீர், சுத்திகரிக்கப்பட்ட நீர், நீர் பாதுகாப்பை மதிப்பீடு செய்தல், மிகவும் பொருத்தமான தொழில்நுட்பத்தின் தேர்வு - மேம்பாடு மற்றும் அதை செயல்படுத்துதல், உள்ளூர் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் பராமரிப்பு ஆதரவு உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களை கையாண்டுவருகிறது.
டி.ஜி. டகானோவின் பல்வேறு நீர்த் தொழில்நுட்பத் தீர்வுகளின் ஆராய்ச்சி, சோதனை மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றை ஐசிசிடபிள்யு நடத்தும், இதில் நிறுவனத்தின் நீர் சேமிப்பு முனை இந்தியாவில் ‘பப்பில் 90’ என அழைக்கப்படுகிறது.
இதன்மூலம், குழாய் இணைக்கும்போது 90 விழுக்காடு தண்ணீரைச் சேமித்திட முடியும்.