செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நாளை (மார்ச் 5) வெளியாக உள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அந்த மனுவில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் இரண்டு கோடியே 42 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், படத்தை வெளியிடுவதற்கு முன்னால் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் கடனை கொடுத்துவிட்டதாகவும், மீதமுள்ள ஒரு கோடியே 24 லட்சம் ரூபாயை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா படத்திற்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 4) விசாரணைக்கு வந்தபோது, எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்திவிட்டதாகவும், 82 லட்சம் தொகையை வட்டியுடன் வருகின்ற ஜூலை மாதத்திற்கு முன்பு திருப்பி செலுத்த உள்ளதால் படத்திற்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்றார். இதையடுத்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி மனுவை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.