சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தொடங்குவது குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் மிஸ் நிஸா பிஸ்வால், மேலாண்மை இயக்குநர் அம்பிகா ஷர்மா, பெட்ரேஷன் ஆப் இந்தியன் சேம்பர் காமர்சின் ஆலோசகர் முராரி மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், "உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கவரும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையைழுத்தாகியுள்ளன. இதனையடுத்து நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றும்.
தொழில் துறையில் நிலவும் முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகளில் அமேசான், ஐபிஎம், ஃபாக்ஸ்கான், கேட்டர் பில்லர், மற்றும் போயிங் போன்ற உலகப் புகழ்பெற்ற கம்பெனிகள் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்துள்ளனர்.
இதனால், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவப் பூங்காக்களில் ஏறக்குறைய எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்களைத் தொடங்கலாம்.
2018ஆம் ஆண்டிலிருந்து புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை, புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவுப் பதப்படுத்தும் கொள்கை, டெக்ஸ்டைல்ஸ் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவற்றை மட்டுமின்றி மின் பேருந்து கொள்கையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : போனா வராது பொழுது போனா கிடைக்காது! - வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்