நாட்டின் 10ஆவது தலைமைத் தேர்தல் ஆணையரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக அமல்படுத்தித் தேர்தல் ஆணையத்தை அதிகாரமிக்க அமைப்பாக அடையாளப்படுத்தியவருமான டி.என். சேஷன் உடல்நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹூ, வருவாய்த் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதனையடுத்து இன்று மதியம் இரண்டரை மணி அளவில் அவரது உடல் தகனத்திற்காக பெசன்ட் நகர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.