கரோனா வைரஸ் பீதியால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் பிலிப்பைன்ஸ் நாட்டில் தவித்தனா்.அவர்களை மீட்டு இந்தியாவிற்கு அனுப்ப அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் தூதரக அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு தனி விமானம் 141 இந்தியா்களுடன் நேற்று மாலை சென்னைக்கு புறப்பட்டது. அதில் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள் 63 பேரும், ஆந்திராவை சோ்ந்தவா்கள் 78 பேரும் இருந்தனா். அவர்கள் மணிலா விமான நிலையத்தில் விமானத்தில் ஏறும்போது, உற்சாக மிகுதியால் இந்திய தேசீய கொடிகளை கைகளில் ஏந்தி, இந்தியாவை வாழ்த்தி கோஷமிட்டனா்.
ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு 9 மணிக்கு சென்னை சர்வதேச விமானநிலையம் வந்தது. விமானத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 37 ஆண்கள், 26 பெண்கள் என 63 பேர் இருந்தனர். மீதி 78 பேருடன் அந்த விமானம் விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றது.
அதன் பின்னர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் 63 பேரையும் சென்னை விமான நிலையத்தில் வரவேற்று, மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகளை நடத்தி முடித்ததோடு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதற்காக அவர்களில் 24 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூா் VIT கல்லூரிக்கும், 39 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகர ஹோட்டலுக்கும் அனுப்பப்பட்டனர்.
அதேபோல் ரஷ்யாவில் சிக்கித்தவித்த 144 இந்தியா்கள் தூதரக ஏற்பாட்டில் மாஸ்கோவிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் மூலம் டெல்லி வழியாக சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் இவர்களை தமிழ்நாடு அலுவலர்கள் வரவேற்றனர். இவா்களில் ஆண்கள் 96, பெண்கள் 48 என மொத்தம் 144 பேர் இருந்தனர். இதையடுத்து அனைவருக்கும் மருத்துவம், குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன, பின்பு 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக 67 பேர் இலவச தங்குமிடமான VIT க்கும், மீதி 77 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடமான சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் தவித்த தமிழர்கள் தாயகம் திரும்பினர்!