சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கடலோர காவல்படை விமானம் ஒன்று இன்று (டிச.10) காலை 11 மணியளவில் ரோந்து பணிக்காக புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் கடலோர காவல்படை வீரா் 3 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் தமிழ்நாடு, ஆந்திரா மாநில கடலோரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் தொழில் நுட்பகோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சென்னை பழைய விமானநிலையத்தின் 2வது ஓடுபாதையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. விமானத்தை அவசரமாக தரையிறக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் செய்யப்பட்டிருந்தன.
அதன்பின் அந்த கடலோர பாதுகாப்பு ரோந்து விமானம் சென்னை விமானநிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்திலிருந்த 3 பேர் பத்திரமாக மீட்க்கப்பட்டனர். பின் அவா்கள் விமானநிலைய வளாகத்தையொட்டி அமைந்துள்ள கடலோர காவல் படை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனால் சென்னை விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் பைலட், உரிய நேரத்தில் தொழில் நுட்ப கோளாறைக் கண்டறிந்ததால் காவல்படை வீரா் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.