நாளை தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் மக்களுக்காகச் சென்னையின் பல்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும்பொருட்டு அமைக்கப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையங்களில் சொந்த ஊர் திரும்ப மக்கள் அலைமோதி வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊர் திரும்பும் மக்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாகவே உள்ளதாகத் தெரிகிறது. இன்று ( நவ. 13) காலை 9 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து 608 பேருந்துகளும், 131 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்இசிடி) தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,000 பேருந்துகளில், ஆயிரத்து 40 பேருந்துகளும், 295 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக நேற்று முன் தினம் முதல் இன்று மதியம் 1.00 மணி வரையில் (நவ. 11 முதல் 13 வரை) மொத்தம் ஆறாயிரத்து, 645 பேருந்துகளில் இரண்டு லட்சத்து 99 ஆயிரத்து 146 பயணிகள் பயணித்துள்ளனர்.
மேலும், இதுவரை 91 ஆயிரத்து 198 பயணிகள் பயணம்செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகளும், 1058 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.
11ஆம் தேதி வழக்கமான 2,000 பேருந்துகளில் 863 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. பல இடங்களில் பேருந்து நிலையத்திலும், பேருந்துகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: தீபாவளி பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவு