சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினரின் தடையை மீறி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் பலரும் நேற்று (அக்.19) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அவரது கட்சியினர், கைது செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை, நேரில் சந்திக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிது. எனவே, இதனைக் கண்டிக்கும் விதமாக ஜி.கே.வாசன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராஜம் எம்பி நாதன், முனவர் பாஷா, சென்னை நந்து மற்றும் வில்சன் உள்ளிட்ட பலர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சட்டவிரோதமாக கூடுதல் மற்றும் மாநகர காவல் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ஈபிஎஸ் உள்பட 1,300 பேர் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஈபிஸ்ஸை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏங்க இருங்க - போலீஸ்காரர்களைப் பார்த்து கொந்தளித்த ஈபிஎஸ்