சென்னை பல்கலைக் கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும், தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளையை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழுக்கு தொண்டாற்றிய தமிழ்ஒளிக்கு அறக்கட்டளை நிறுவப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழின் மகத்துவத்தை, மேன்மையை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் நமக்கெல்லாம் பெரும் கடமை இருக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிப்பதில் திராவிட மாடல் ஆட்சி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். தமிழ் வளர்ச்சிக்காக கல்லூரிகளிலும் பள்ளிகளிலேயும் தமிழை எப்படி வளர்ப்பது என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம். பெண்கல்வியை, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் திராவிட மாடல் ஆட்சி முனைப்போடு இருக்கிறது.
பெண்கள் வளர்ச்சிக்காக சிறப்பு திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிற அரசு திமுக. பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தி உறுதி செய்வதில் காவல் துறையை சீர்படுத்துவதில் அரசு முனைப்பாக இருக்கிறது. யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்று காயத்ரி ரகுராம் கூறுவது ஒன்றும் பெரிதில்லை என்றார்.
காயத்ரி ரகுராம் திமுகவில் இணைய விரும்பினால் இணைத்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள். காயத்ரி ரகுராமுக்கும் அதே தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: திடுக்கிடும் தகவல்