சென்னை: மாமன்னர் திருமலை நாயக்கர் பேரவையின் பொதுச்செயலாளர் அய்யலு சாமி நாயுடு, நிறுவனத் தலைவர் சுப்பையா நாயுடு, பொருளாளர் பத்மநாபன் நாயுடு, போராட்டக்குழுத் தலைவர்கள் பாலகிருஷ்ணன் நாயுடு, நல்லய்யா நாயுடு, ராமமூர்த்தி நாயுடு, ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், “ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தலைசிறந்த நிர்வாக திறமை வாய்ந்தவருமான சந்திரபாபு நாயுடு, ஒருங்கிணைந்த ஆந்திராவில் தலைநகர ஹைதராபாத்தை உருவாக்கி, சிறந்த தொழில் வளர்ச்சியை உருவாக்கியவர். இன்றைய ஆந்திராவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சந்திரபாபு நாயுடுவை முறைகேடாக கைது செய்து சிறை வைத்துள்ள செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவால் ஆரம்பிக்கப்பட்ட போலாவரம் நீர் மேலாண்மை திட்டத்தையும், பட்டிசீமா (Pattiseema Lift Irrigation Project) நீரேற்று திட்டத்தையும் முடித்திருந்தால், ராயலசீமா பகுதி மற்றும் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் நீர்வளம் மிகுந்த வளமான பகுதியாக இருந்திருக்கும்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால், செயல்படுத்தாமல் திட்டத்தை வீணாக்கியது மட்டுமின்றி சிறந்த திட்டத்தை தொடங்கியவரை வரைமுறை இன்றி கைது செய்து சிறையில் வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சந்திரபாபு நாயுடுவை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்த ஜனநாயக படுகொலையை மாமன்னர் திருமலை நாயக்கர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், திறன் வளர்ப்பு பயிற்சி அளித்து பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கித் தந்துள்ளார். இதனால் அவருக்கு இளைஞர்களிடம் நல்ல பெயர் உள்ளது. இதனை பொறுக்க முடியாமல் வேண்டுமென்றே அரசியல் பழிவாங்கலுடன் கைது செய்துள்ளனர். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தங்களுக்கு அமைச்சரையில் இடம் வேண்டாம், வளர்ச்சித் திட்டங்களை வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார்.
அதனால் தான் தங்க நாற்கரை திட்டத்தின் மூலம் சாலை வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டது. 36 தடுப்பணைகளை கட்டி விவசாயத்தை செழிக்க செய்துள்ளார். இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் வகையில் கைது செய்து வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவை விடுதலை செய்யாவிட்டால் சென்னை வள்ளளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்துவோம்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "நாங்கள் சொல்வதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம்"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!