இந்தியாவில் தீவிரமடைந்துள்ள உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நாடு தழுவிய முழுமையான ஊரடங்கை அறிவித்த மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த ஊரடங்கு நடவடிக்கையால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சிக்கிக் கொண்டு தவித்து வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், ஆன்மீக யாத்திரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் வெவ்வேறு இடங்களில் சிக்கி தமது சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மும்பை, கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், டெல்லி என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு வரமுடியாமல் உள்ளனர். இப்படி சிக்கி உள்ள நபர்களை மீட்க மாநில வாரியாக 19 ஐ.ஏ.எஸ் அலுவர்களை நியமித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறிப்பில், "புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் எனப் பல இடங்களில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்க மாநில வாரியாக 19 ஐ.ஏ.எஸ். அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 19 ஐஏஎஸ் அலுவர்களை தொடர்பு கொள்ள மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாநில வாரியாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள நபர்கள் தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.