சென்னை: சோழிங்கநல்லூர், திருவள்ளுவர் தெருவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் மண்டல மேலாளர் கடந்த 6ஆம் தேதி ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர்களின் நகைகள் குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வந்த பெண் நகைகளை திருடி இருப்பது பதிவாகி இருப்பதைப் பார்த்துள்ளார்.
அதன் பேரில், மேலாளர் பன்கிம் கபூம் (45) செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 54 சவரன் நகைகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி காவல் துறையினர், வங்கியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த லூர்து மேரியை (39) காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில், லூர்து மேரி வங்கியில் அனைவரின் நம்பிக்கையை பெற்றதால் வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க அளவீடு செய்ய எடுத்து வரும் பணியை கொடுத்து உள்ளனர். அப்படி எடுத்து வந்தபோது சிறுக சிறுக திருடியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறிது சிறிதாக நகைகளை திருடி சுமார் 8க்கும் மேற்பட்ட அடகு கடைகளில் அடகு வைத்து பணம் வாங்கி உள்ளார். இதில் 41.79 சவரன் நகைகளை மீட்டு, கைது செய்யப்பட்ட பெண்ணை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு சட்டப்பேரவை; கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்!