நடிகர் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் என்பவர் தயாரித்திருந்தார். படத்தால் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாகக் கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், ஆக்சன் படம் நஷ்டம் அடைந்த நிலையில், விஷால் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்தாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு ஒரு கதையைச் சொல்லி, அதைப் படமாக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.
தற்போது விஷால் நடிப்பில் 'சக்ரா' என்ற படத்தை இயக்குநர் ஆனந்தன் இயக்கி அது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ஆக்சன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், இரண்டு வாரத்தில் 4 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி சக்ரா படத்தை வெளியிட விஷாலுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
இவ்விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள வேண்டுமெனவும், இது தொடர்பாக மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்தத் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்தியஸ்தர் நியமனம் குறித்தும், சமரச தீர்வு காணும் வரை ஒரு கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரின் பெயரில் டிபாசிட் செய்வது குறித்து, இன்று(பிப்.4) விளக்கமளிக்க இரு தரப்புக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இவ்வழக்கு, இன்று (பிப்.4) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமிக்க இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனர். அதேபோல ஒரு கோடி ரூபாயை டிபாசிட் செய்ய விஷால் தரப்பிலும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, சக்ரா பட விவகாரம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண மத்தியஸ்தராக, ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரபாபுவை நியமித்து உத்தரவிட்டது.
மேலும் 4 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்த வேண்டும் என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, சமரச தீர்வு சட்டப் பிரிவுகளுக்கு முரணாக உள்ளதாகக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஒப்புதல் அளித்தபடி, ஒரு கோடி ரூபாயை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் 14 நாட்களில் டிபாசிட் செய்து, தலைமைப் பதிவாளரிடம் ரசீதை சமர்ப்பிக்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.