சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதனடிப்படையில், காவல் துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நான்கு பேர் கொண்ட கும்பலை விசாரித்தபோது அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முகமது யூசுப் ஷேக் (30), ஷேக் ஜஹாங்கீர்செக் (29), சபீர் அலி (30), முகமது உபயதுல் இஸ்லாம் (32) சேர்ந்தவர்கள் என்பதும் அயப்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஹெராயின் என்ற போதைப் பொருளை விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புடைய 10 கிராம் ஹெராயின் போதைப் பொருளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து நான்கு பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லி விமான நிலையத்தில் ரூ. 22 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்