டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம்(MGNREGA) கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5 கோடியே 97 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தி உள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து கூடுதலாக 7 முதல் 26 ரூபாய் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், மாநிலங்களுக்கு ஏற்றவாறு இந்த ஊதியத் தொகையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 2 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 2022-23 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் ரூ.281 வழங்கப்படுகிறது.
வரும் 2023-24 நிதி ஆண்டுக்கு ஊதியத் தொகை 4 புள்ளி 63 விழுக்காடு உயர்த்தப்பட்டு ரூ.294 ஆக ஊதிய உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் 10 புள்ளி 39 விழுக்காடு ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. கேரளாவில் 2 புள்ளி 2 விழுக்காடு, கர்நாடகாவில் 2 புள்ளி 27 விழுக்காடு, புதுச்சேரியில் 4.63 விழுக்காடு மாநிலங்களுக்கு ஏற்ப ஊதிய சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பல கிராமங்களில் பணிகள் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூர் கம்பெனி பெயரில் அடாவடி வசூல்.. டாஸ்மாக் ஊழியர்கள் ஸ்ரைக் அறிவிப்பு.. அமைச்சருக்கு வந்த சிக்கல்!