சென்னை: தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும், கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனைக்கும் இடையே, பாத மருத்துவம் - நீரழிவு நோய் அறுவை சிகிச்சை சேவைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் கையெழுத்தானது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் சட்டமன்றத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தாலுக்கா மருத்துவமனைகளில், நீரிழிவு நோய் மற்றும் குருதிநாள பாதிப்புகளால் ஏற்படும் கால்பாத பாதிப்புக்களை கண்டறிந்து, ஆரம்ப நிலையில் கால் இழப்புக்களை குறைக்கும் திட்டம் (Foot Clinic / Stop Amputation) ரூ.1.05 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, 3.10.2022 அன்று தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில், பாத மருத்துவ மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளை கண்டறிந்து, ஆரம்ப நிலை சிகிச்சை அளிப்பதன் மூலமாக கால் இழப்புகளை தடுக்கும் முன்மாதிரி திட்டத்தின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரம் சர்க்கரை நோயாளிகளுக்கு, பாத பாதிப்புகளை கண்டறியும் முன்னெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும் சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இதில் காலில் உணர்வு இழப்பின் காரணமாக ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கு, Surgical Offloading எனப்படும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி கடந்த செப்.28 அன்று, தஞ்சாவூரில் 14 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த முன்னெடுப்பு, ஓராண்டு கால திட்டமாக செயல்பட மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக நீரிழிவு கால் அறுவை சிகிச்சை சேவைகள் (Diabetic Foot Surgery Services), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படும், பொது அறுவை சிகிச்சைத்துறை மூலமாக தொடங்கப்பட உள்ளன.
மேலும் பொது அறுவை சிகிச்சைத் துறையோடு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சைத்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு மூலமாக, StAMP - Stop Amputations எனப்படும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நோக்கில், இத்துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையோடு தமிழ்நாடு அரசு இன்று (அக்.31) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. இதனைத் தாெடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், Podiatry எனப்படும் பாத மருத்துவ மையம் துவங்கப்பட உள்ளது.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி இருக்கிறார். அனைவரும் இதற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும் மத்திய அரசிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நீட் விலக்கு குறித்தான அவசியம் குறித்து எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு வந்த குடியரசு தலைவரிடத்திலும், நீட் விலக்கு குறித்து முதலமைச்சர் பேசி, அதற்குண்டான கடிதத்தினையும் கொடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த 29ஆம் தேதி, ஆயிரத்து 943 மழைக்காலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதன்மூலம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 876 பேர் பயனடைந்து உள்ளனர். இதில் 335 பேருக்கு காய்ச்சல், 254 பேருக்கு இருமல் மற்றும் சளி கண்டறியப்பட்டது.
மருத்துவர்கள் ஞாயிற்று கிழமைகளில் முகாம்கள் வேண்டாம் என்றும், சனிக்கிழமைகளில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கையினை வைத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவத் துறை செயலாளரிடமும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரிடமும் ஆலோசிக்கப்பட்டு, இனிமேல் வருகின்ற வாரம் முதல் சனிக்கிழமைகளில் முகாம்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவத் துறை வரலாற்றிலேயே தொடர்ந்து 10 வாரங்கள் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!