எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவங்களுக்குப் பின், "தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்துத் தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சிக்கும் விதமாக நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் பேசி காணொலி வெளியிட்டார்.
இதையடுத்து தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்ட எஸ்.வி. சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்தியக் குற்றப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் எனக் கூறி,முன் பிணைகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தபோது, 'இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலேயே தேசியக் கொடியில் காவி மற்றும் பச்சை நிறம் இடம்பெற்றுள்ளதாக காந்தியடிகள் கூறியிருந்த கருத்தையே தான்' தெரித்ததாக எஸ்.வி.சேகர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த காவல் துறை தரப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு முன்னர் காந்தியடிகள் இந்தக் கருத்தை தெரிவித்ததாகவும், அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், தேசியக் கொடியின் வண்ணங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மத ரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் எஸ்.வி.சேகர் தற்போது கருத்து தெரிவித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தேசியக் கொடியை அவமதித்ததால் பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ், எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த காவல் துறை, விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவில் எஸ்.வி.சேகர் இன்று காலை ஆஜராகியுள்ளதாகவும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடையாததால் மீண்டும் வரும் 28ஆம் தேதி ஆஜராக எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எஸ்.வி.சேகர் தரப்பில், சுதந்திர தினத்தன்று அறிவாலயத்தில் ஸ்டாலின் கொடி ஏற்றியபோது, தேசியக் கொடிக்கு உரிய மரியாதை கொடுக்காமல் இருந்ததாக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் கொடுத்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, பழிவாங்கும் நோக்கில் தன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அடுத்த விசாரணை வரை தன்னைக் கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விசாரணையின்போது எஸ்.வி.சேகர் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்தே, அவரைக் கைது செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும்; இடையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்குப் பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: இ.ஐ.ஏ 2020 : ஆட்சேபனை தெரிவிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு!