சென்னை: மண்ணடி தொழில்அதிபர் திவான் அக்பரை கடத்திச் சென்று மிரட்டி 2 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபரான திவான் அக்பரை கடந்த மாதம் 17ஆம் தேதி தவ்பீக் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து முத்தியால்பேட்டையில் வைத்து கடத்தி சென்றனர். பின்னர் ஈசிஆர் பகுதியில் உள்ள விடுதியில் வைத்து தாக்கி 2 கோடி ரூபாய் கொடுத்தால் விடுவதாக கூறியுள்ளனர். இதனால் திவான் அக்பரின் தம்பி தவ்பீக்கிடம் 2 கோடி ரூபாய் கொடுத்து அவரை அழைத்து சென்றார்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக திவான் கடந்த 24ஆம் தேதி முத்தியால்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் என்பது தெரியவந்தது. மேலும் திவான் மற்றும் தவ்பீக் இருவரும் ஹவாலா பண பரிமாற்றம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
தொழிற்போட்டியின் காரணமாக திவான் அக்பரை கடத்தி தவ்பீக் பணம் பறித்தது தெரியவந்தது. திவான் அக்பரை கடத்திய தவ்பீக்குக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தவ்பீக் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடும் பணியில் முத்தியால்பேட்டை காவலர்கள் தீவிரம் காட்டினார். திவான் அக்பரை கடத்திய வழக்கில் தவ்பீக் கூட்டாளிகளான உமா மகேஷ்வரன், பிலால், காதர், அப்துல் ரியாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், தற்போது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த அமீர் என்பவரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக இந்த கடத்தல் வழக்கில் இதுவரை மொத்தம் 6 நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கும்பல் தலைவன் தவ்பீக்கை பிடிக்க தனிப்படை போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பிற மாநில போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உதவியை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தவ்பீக்கின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் அவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பில்லாததால்ம, மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.