தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வித்திட்ட இயக்குநர், 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவில்லாத கல்லாதோருக்கு, அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் என்ற திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது வரவேற்கத்தக்கது. இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்றால் நிறைவேற்ற தேவையான களப்பணியாளர்களையும், கற்பித்தல் பணிக்கு தகுதியான ஆசிரியர்களையும் தனியாக நியமித்திட வேண்டும். அதை விடுத்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்துவது என்பது அவர்களது அன்றாட நடைமுறைப் பணியான கற்பித்தல் பணியைப் பெரிதும் பாதிப்பதாக அமைந்துவிடும். இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
”தற்போது ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தப் பணிக்கு நியமித்து ஊதியம் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கற்போம் எழுதுவோம் மையத்தை பள்ளிகளில் அமைக்க வேண்டும். வரும் 23ஆம் தேதி வகுப்புக்கள் தொடங்கப்பட வேண்டும்.
பள்ளி வேலை நாட்களில் 2 மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். தன்னார்வலர்களுக்கு ஊதியம் கிடையாது. தன்னார்வலர்கள் கிடைக்காவிட்டால் ஆசிரியர்களே பாடம் கற்பிக்க வேண்டும்” எனவும் அத்திட்டம் குறித்து அறியமுடிகிறது.
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் முதியோர் கல்வி மையத்தை அமைப்பது என்பதும், பள்ளி வேலை நாட்களில் இரண்டு மணி நேரம் முதியோர் கல்வி மையம் இயங்கும் என்பதும் பொருத்தமற்றதாக உள்ளது. 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் என கூறியுள்ள நிலையில், அதிகபட்சமாக எத்தனை வயது வரை மையத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
15 வயதிற்கு மேல் எழுத்தறிவற்றவர்களில் 95விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள். அன்றாடம் வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு உணவு. அப்படிப்பட்டவர்கள் வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகை தந்து இரண்டு மணி நேரம் படிக்க வேண்டும் என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாக உள்ளது.
கற்போம் எழுதுவோம் திட்டம் வெற்றி பெற இதற்கெனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் . மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆசிரியர்களைப் இப்பணியில் ஈடுபடுத்தக்கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் எழுத்தறிவின்றி 1.24 கோடி பேர்: 3.10 லட்சம் பேருக்கு கல்வி அளிக்க திட்டம்