தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 22) கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவில், பொதுமக்கள் பங்கேற்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கரோனா காரணமாக வழக்கமான முறையில் மிகப்பெரிய சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தக்கூடாது, ஊர்வலமாக செல்லக்கூடாது, வீட்டிலேயே விநாயகரை வைத்து வழிபட வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. விநாயகரை கடலில் கரைக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர்கள் தினகரன், அருண் ஆகியோர் தலைமையில் 41 இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அரசின் கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறையினர் அறிவுறுத்தினர்.
இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் திடீரென வெளிநடப்பு செய்தனர். இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வாயில் பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு வெளிவந்த பல்வேறு இந்து அமைப்புகள் இந்த கட்டுப்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த கோபால் சசிகுமார் கூறுகையில், தமிழ்நாடு அரசின் அனைத்து வித கட்டுப்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு தந்தாலும், தகுந்த இடைவெளியை பின்பற்றி மெரினா கடற்கரையில் சிலையை கரைக்க தடை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நீர்நிலைகள் இல்லாதபட்சத்தில் கடற்கரையை தவிர வேறு எங்கு கரைப்பது. டாஸ்மாக்கை திறக்க வழி வகை செய்யும் அரசு, விநாயகர் சதுர்த்தியை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என குற்றஞ்சாட்டினார்.