சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததையடுத்து அவர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கடந்த வாரம் பெங்களூரில் வைத்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள்கள் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் மணிகண்டன் செல்போன், ஏசி, பெட் உள்ளிட்ட வசதிகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக சிறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.
சொகுசு அறையில் இருந்த மணிகண்டன்:
இதையடுத்து, டிஎஸ்பி தலைமையிலான அலுவலர்கள் மணிகண்டனின் அறைக்குச் சென்று சோதனை நடத்தினர். சோதனையில், சோபாவுடன் கூடிய பெட், ஏசி ஆகியவை இருந்ததை கண்டு அதிர்சியடைந்த அலுவலர்கள் உடனடியாக மணிகண்டனை புழல் சிறைக்கு மாற்றினர்.
மேலும், மணிகண்டன் அறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உயலுவலர்களிடம் சமர்பித்துள்ளனர். இந்த வசதியை செய்து கொடுத்த சிறை பணியாளர்கள், அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் சிறை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வழக்கு விசாரணை:
இதற்கிடையில், மணிகண்டனை விசாரிக்க 5 நாள்கள் காவல் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணை இன்று (ஜூன் 29) நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் நண்பர் பரணிதரனுக்கு முன் ஜாமீன்