சென்னை: டிசம்பர் மாதம் 5ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தும்போது பாதுகாப்பு வேண்டி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு: பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது, "வருகின்ற 5ஆம் தேதி அன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவருடைய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, பாதுகாப்பு வழங்க வேண்டி மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்து மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக் கொண்டு உரிய பாதுகாப்பு அளிக்கபடும் என உறுதி அளித்துள்ளனர்.
150 நாட்களாகியும் வேங்கை வயல் பிரச்சினையை கண்டுகொள்ளாத திமுக: ஜெயலலிதாவின் முன் முயற்சியினால் தான் ஒன்பதாவது அட்டவணையில் 69% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. திக தலைவர் வீரமணி கூட சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டமும் கொடுத்தார். சமூக நீதி என வாயிலே காட்டாமல் செயலிலே காட்டியவர் ஜெயலலிதா.
சமூக நீதி குறித்து பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 150 நாட்களாகியும் வேங்கை வயலில் துர்நாற்றம் போகவில்லை. உண்மையை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தத்தளித்து கொண்டுள்ளது. பொன்முடி போன்றோர் எல்லாம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் குறித்து பேசியதையெல்லாம் ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். சமூகத்திற்கு கேடு விளைகின்ற, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கின்ற கட்சி திமுக.
விலைவாசியை குறைப்போம் என ஆட்சிக்கு வந்து, கட்டணத்தை உயர்த்தி சாதனை செய்யும் திமுக: ஆட்சிக்கு வந்த உடனே உலகம் முழுக்க இருக்கக்கூடிய பொருளாதார வல்லுநர்களை அழைத்து வந்து எல்லோருக்கும் எல்லாம் செய்து விடுவோம் என வாய் கிழிய பேசினார்கள். அந்த குழு என்ன அறிக்கை கொடுத்தது? இதுவரை எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. பொருளாதார வல்லுநர் குழுவை அமைத்த அரசு சொத்து வரி, மின்சார கட்டணம், பால் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? விலைவாசி உயர்வால் மக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலம் ஓடும் என்று கூறிவிட்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய செயலில்தான் விடியாத இந்த திமுக அரசு இருக்கிறது. தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை.
வறுமை தாண்டவம் ஆடும் நிலையில் கார் ரேஸ்-க்கான காரணம் என்ன?: தமிழ்நாட்டு மக்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்டு, வறுமை தாண்டவம் ஆடக்கூடிய நிலையில், 46 கோடியில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்துவதற்கு என்ன அவசியம்? நல்லா இருக்கிற ரோடு எல்லாம் குண்டும்குழியுமாக குத்தி போட்டு உள்ளனர். 4 மணிக்கு வர வேண்டிய நான் சிவானந்தா சாலையை மூடி உள்ளதால் உயர்நீதிமன்றத்தை எல்லாம் சுற்றி 4:15க்கு தான் வந்து அடைய முடிந்தது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது.
கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. 75% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. அவரின் அப்பாவின் புகழ் பாடுவதற்கு மக்கள் வரிப்பணமா? உலகத்திலே எந்த ஆட்சியும் இதுபோன்று செயல்படவில்லை. வலிமை உள்ளவர்கள் வைத்தது எல்லாம் சட்டமாகாது என்ற புரட்சித்தலைவரின் பாடல் படி, 2024இல் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்து அதிமுகவிற்கு 40 தொகுதிகளையும் கொடுத்து, நாடாளுமன்றத் தேர்தலோடு திமுக கதை முடிந்தது என்று மக்கள் எழுதுவார்கள்.
பாஜகவோடு இனி நோ கூட்டணி: பாஜகவோடு இப்போதும் எப்போதும் கூட்டணி இல்லை. மக்கள் பாதிக்கப்படுகின்ற பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி வருகிறோம். இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். தேர்தலுக்கு இன்னும் மூன்று நான்கு மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். திமுக கூட்டணியில் மாறுபட்ட கொள்கை உடையவர்கள் தான் உள்ளனர். தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவிற்கு நிர்வாகிகள் வருவதற்கு கண்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேர்தல் நெருங்கும்போது பல கட்சிகள் வெளியேறி அதிமுக தலைமையில் அணிவகுக்கும்.
ரெய்டு-க்கு அஞ்சும் திமுக: அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ என எந்த துறை வந்தாலும் அஞ்சாத இயக்கம் அதிமுக. திமுக தான் பார்த்து பயப்பட வேண்டும். மணல் கொள்ளையில் 60ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளதாக துரைமுருகன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீது அமலாக்கத்துறை ஆய்வு செய்ய வேண்டும். கடந்த 29 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் உரிய பணியாளர்கள், மருத்துவர்கள் இல்லாமல் பொது மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
வாய்ச்சவடால் விடும் அமைச்சர் மா.சு: அமைச்சர் மா.சு-வை பொருத்தவரை வெறும் பேட்டி தான். வாய்ச்சவடால்தான். ஸ்டாலினை சுத்தி சுத்தி வருவது தான் அவரது வேலை. முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்வதால் எந்த விதமான பலனும் இல்லை. சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்லுகிறாரே தவிர எதுவும் நடக்கவில்லை. கடலூரில் போதையில் தன் தாயையே கொன்று புதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போதையை கட்டுப்படுத்த தவறியதால் எல்லா வகையிலும் போதை வஸ்துக்களான கஞ்சா, அபின் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. சட்டம் சீர்கெட்டுள்ளது" என பல்வேறு கண்டனங்களை முன்வைத்து பேசினார்.
இதையும் படிங்க: சாதி வாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் - மீண்டும் உறுதிப்படக் கூறிய ஸ்டாலின்!