சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (பிப்.7) காலை திடீரென பனியின் தாக்கம் அதிகமானது. இதனால் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்க வேண்டிய விமானங்கள், விமான ஓடுபாதை தெளிவாக இல்லாததால் வானிலே தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டே இருந்தன.
இதன் காரணமாக பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, துபாய், அடிஸ் அபாபா உள்ளிட்ட 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் இருந்தன. பின்னர் வானிலை சீரடைந்ததைத் தொடர்ந்து விமானங்கள் தரையிறங்கியது. இதனால் காலை பெங்களூருவில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், சிறிது நேரம் வானில் வட்டமடித்து விட்டு மீண்டும் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்றது.
அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து விட்டு பெங்களூருக்குச் சென்றது. மேலும் அடிஸ் அபாபாவிலிருந்து சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானமும் பெங்களூருக்கு திரும்பிச் சென்றது.
இதனால் இன்று காலை பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் 3 விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றுள்ளன. ஆனால் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள், தாமதமின்றி சரியான நேரத்தில் தங்களது இலக்கை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - 2 நாட்களில் நான்காவது முறை!