சென்னை: தமிழ்நாட்டில் மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு விடுமுறை என்று தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறைகள் வருகின்றன. வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மிலாடி நபி விடுமுறை, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1, சனி ஞாயிறு விடுமுறை, அக்டோபர் 2ஆம் தேதி திங்கள் காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால், சென்னையில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்துள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான டிக்கெட் அதிக அளவில் புக் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தமிழ்நாட்டிற்குள் செல்லும் விமானங்களில்தான் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால், தற்போது இந்த ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையினால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல பயணிகள் அதிகப்படியான ஆரவாரத்தை காண்பித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு சில தினங்களாக விமானங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிறைந்து வழிகிறது.
இதனால் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன. சென்னையில் இருந்து சுற்றுலாத்தலமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமானக் கட்டணம் 9 ஆயிரத்து 720 ரூபாய் ஆகும். ஆனால், தற்போது 28-ஆம் தேதி கட்டணம் 32 ஆயிரத்து 581 ரூபாயும், 29ஆம் தேதி கட்டணம் ரூபாய் 28 ஆயிரத்து 816 ஆகவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூபாய் 10 ஆயிரத்து 558 என்று இருந்த நிலையில், தற்போது 28ஆம் தேதி கட்டணம் ரூ.21 ஆயிரத்து 509 ஆகவும், 29ஆம் தேதி கட்டணம் 20 ஆயிரத்து 808 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வழக்கமான கட்டணம் ரூபாய் 9 ஆயிரத்து 371-ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதியைப் பொறுத்தவரையில் கட்டணம் 20 ஆயிரத்து 103 ரூபாயாகவும், 29ஆம் தேதி கட்டணமாக 18 ஆயிரத்து 404 ரூபாயாகவும் நிர்ணயக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கோலாலம்பூருக்கு வழக்கமான கட்டணம் ரூபாய்7ஆயிரத்து 620ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதி கட்டணம் ரூபாய் 15 ஆயிரத்து 676 ஆகவும், 29 ஆம் தேதிக்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து 230 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இலங்கையின் கொழும்புவுக்கு வழக்கமான கட்டணம் ரூபாய் 6 ஆயிரத்து 698-ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 11 ஆயிரத்து 234 ஆகவும், 29ஆம் தேதி கட்டணம் ரூபாய் 10 ஆயிரத்து 630 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல் இந்தியாவுக்குள் சுற்றுலாத்தலங்களான சென்னை- மைசூரு இடையே வழக்கமான விமானக் கட்டணம் ரூபாய் 2 ஆயிரத்து 558 ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 7 ஆயிரத்து 437-ஆகவும், 29ஆம் தேதிக்கான கட்டணம், ரூபாய் 5 ஆயிரத்து 442 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னை - கோவா இடையே வழக்கமான கட்டணமாக ரூபாய் 4 ஆயிரத்து 49 ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 8 ஆயிரத்து148 ஆகவும், 29ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 9 ஆயிரத்து 771 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் செல்லும் விமானங்களின் கட்டணங்கள், தொடர் விடுமுறையயையொட்டி பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்குச் செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானக் கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை - தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூபாய் 3 ஆயிரத்து 853 ஆக இருந்த நிலையில், 28ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 11 ஆயிரத்து 173-ஆகவும், 29ஆம் தேதிக்கான கட்டணம் ரூபாய் 9 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுலா செல்லும் பயணிகள் கூட்டம் சென்னை விமான நிலையத்தில் அலைமோதுவதால் சர்வதேச முனையம் மற்றும் உள்நாட்டு முனையம் ஆகிய இடங்களில் புறப்பாடு பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், சென்னை விமானம் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு பெருமளவு அதிகரித்து உள்ளது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இது மட்டுமின்றி, சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விலை மலர்கள் செல்லக்கூடிய விமானங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!