சென்னை: மெட்ராஸில் இருந்து, சென்னை என்று பெயர் மாற்றப்பட்ட காலத்தில் இருந்து சென்னை பல்வேறு வளர்ச்சிகள் அடைந்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை, சிங்கார சென்னையாக பிறப்பெடுத்து, அடுத்தடுத்த வளர்ச்சிகளுக்கு சென்று கொண்டு இருக்கிறது. பறக்கும் ரயில், மெட்ரோ ரயில், பூங்காக்கள், புதிய மேம்பாலங்கள் என பல வளர்ச்சிகள் அடைந்தன.
அதேபோல் சென்னை மாநகராட்சியின் பரப்பளவும் விரிந்துக் கொண்ட சென்றது. தற்போது சிங்கார சென்னை 2.0 மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பூங்காவை சீரமைத்தல், குளங்கள், ஏரிகள், பாலங்களில் தொங்கும் தோட்டம், நடைபாதை சீரமைத்தல், மேலும் சைக்கிளுக்கு என்று முக்கிய வீதிகளில், தனி லேன், சாலை விளக்குகள் என்று பல்வேறு வகையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் ஆய்வு நடத்தியும், பாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன. இதன்படி சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்,(CMDA), மெட்ரோ ரயில் நிறுவனம், நெடுஞ்சாலைத் துறை, உள்ளிட்ட மாநில அரசு துறைகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன.
சென்னையில், போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதி, முக்கிய சாலை சந்திப்புகளிலும், நீண்ட சாலையில் இருக்கும் சந்திப்புகளிலும், அண்ணா சாலையிலும், புதிய மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து வருகின்றன. அதன் வரிசையில், தற்போது சென்னையின் முக்கிய வணிக பகுதியாக பார்க்கப்படும் தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில்(south usman) இருந்து சி.ஐ.டி. நகர் 1-ஆவது பிரதான சாலை இடையே 131 கோடி ரூபாய் மதிப்பில், தியாகராய நகரில் இருக்கும் முக்கிய சந்திப்புகளை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை, சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் தியாகராய நகரில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், பர்கிட் சாலை சந்திப்பில், வாகனங்கள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பாலம் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த பாலம் மொத்தம் 1.2 கி,மீ தொலைவும், 8.40 மீ அகலம் கொண்டவையாக இருக்கும். இதில் இரண்டு பகுதிகளிலும் வண்டி செல்ல கூடியவை. மொத்தம் 53 தூண்கள் இதில் அமைக்கப்பட உள்ளது.
இணைப்பு சாலையின் அகலம் 4 மீ மற்றும் நடைபாதை 1.5 மீ அகலமாகவும் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் சிஐடி நகர் பிரதான சாலையில், 140 மீட்டர் நீளத்திற்கும், உஸ்மான் சாலையில் 120 மீட்டர் நீளத்திற்கும் ஏறும் தளமும், 100 மீ நீளத்திற்கு இறங்கும் தளமும் அமைக்கப்படுகின்றன. தூணையும், பாலத்தின் மேற்பரப்பை இணைக்கும் பகுதியில், இரும்பு கிரைடர்கள் (STEEL COMPOSITE GRIDER)அமைக்கப்படும்.
அதன் பிறகு அதன் மேல் தார் சாலை அமைக்கப்படும். தற்போது 5-தூண்கள் அமைக்கபட்டு உள்ளன. கடைக்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது,"சென்னையில் இதுவரை அமைக்கப்பட்டு வந்த பாலங்களின் தூண்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டு தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகரில், முதல் முறையாக பாலங்களுக்கான தூண்களை இரும்பு கொண்டு அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
பாலம் அமைக்கும் போது, கடைக்கால் நிறுத்துப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலத்திற்கான வலிமை அதிகரிக்கும். அதேபோல் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பு கம்பிகளால் ஆனது, இந்த தூண் போன்ற வடிவமைப்பு, சேலம் இரும்பு ஆலையில் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி தொடங்கும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் மேல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும்" என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு இரும்பு தூண்களை கொண்டு பாலத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் இது போன்ற பாலம் சென்னையில் தான் முதல் முறையாக அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆவணி முதல் முகூர்த்த நாள்.. திருச்செந்தூர் கோயிலில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!